மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 2வது ரெஸ்டில், பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 365 ஓட்டங்களை குவித்துள்ளது. பத்தாவது வீரராகக் களமிறங்கிய அறிமுகம் அபுல் ஹாசன் சதம் விளாசி சாதனை படைத்தார்.
குல்னா, ஷேக் அபு நாசர் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், நாணயசுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 98 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. தலைவர் முஷ்பிகுர் ரகிம், நசீர் உசேன் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 87 ஓட்டங்களை சேர்த்தனர். நசீர் 52, ரகிம் 38, சோகக் காஸி ஆட்டமிழந்து வெளியேற பங்களாதேஷ் 193 ஓட்டங்களுக்கு 8 விக்கெட் இழந்தது.
விரைவில் ஆட்டமிழப்பு செய்துவிடலாம என்ற முனைப்புடன் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் உற்சாகமாகப் பந்து வீசினர். ஆனால், மகமதுல்லா, அபுல் ஹாசன் ஜோடி 9வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடியது. இவர்களைப் பிரிக்க முடியாமல் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் திணறினர். மகமதுல்லா அரை சதம் அடிக்க, மறுமுனையில் அபுல் ஹாசன் சதம் விளாசி அசத்தினார்.
அறிமுக போட்டியில் பத்தாவது வீரராகக் களமிறங்கி சதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமை அபுல் ஹாசனுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக, 1902ல் ரெக்கி டப் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் பங்களாதேஷ் 8 விக்கெட் இழப்புக்கு 365 ஓட்டங்களை எடுத்துள்ளது. மகமதுல்லா 72 ஓட்டங்கள் (89 பந்து, 9 பவுண்டரி), அபுல் ஹாசன் 100 ஓட்டங்களுடனும் (108 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் உள்ளனர். மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சில் எட்வர்ட்ஸ் 5, சம்மி 2, பெருமாள் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
No comments:
Post a Comment